சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர், அதற்கு அடிமையாகி, பணத்தை தொலைத்து, அதன் காரணமாக பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை நாடினர். இதையடுத்து, பல மாநிலங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்தன. இதையடுத்தும் ததிழகஅரசும்ஆன்லைன் ரம்பி விளையாட்டை தடை செய்து கடந்த 2020ம் ஆண்டு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்திருந்தார். அதன்படி, ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகஅரசின் அவசர சட்டத்தை எதிர்த்து, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
கடந்த விசாரணையின்போது, ரம்மி நிறுவனங்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் போன்றோர் ஆஜராகினர். விசாரணையின்போது, கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்கு தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரம்மி நிறுவனங்களின் வழக்கறிஞர்கள், ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லி கட்டிற்கு தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும்,, பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றபட்டதாகவும், இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் தீர்ப்பை ஆக்ஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கமுடியாது எனவும், புதிய சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்… உயர்நீதிமன்ற நீதிபதி
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்