டெல்லி: எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 19ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இந்த மாதம் (ஆகஸ்டு) 13 வரை நடைபெறவுள்ளது. ஆனால், இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே, விவசாயிகள் போராட்டம், எரிபொருட்கள் விலை உயர்வு, பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாஜக அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, எதிர்க்ட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தவிர பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு சைக்கிளில் சென்றார். அவருடன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் சைக்கிளில் சென்றனர்.