டெல்லி: தன்பாத் நீதிபதி ஆட்டோ மோதி  கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்தை, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்து உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட செசன்ஸ் நீதிபதி உத்தம் ஆனந்த் அதிகாலை  நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஆட்டோவால் கொல்லப்பட்டார். இது தொடர்பான காணொலி காட்சி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், நீதிபதி பின்னால் சென்ற ஆட்டோர், திடீரென அவர்மீது மோதி தள்ளி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால், படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இந்த விபத்து திட்டமிட்டதாக இருக்கலாம், கொலை என்றும்  தகவல்கள் பரவி வருகின்றன.  இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில்  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங் உதவியாளர் ரஞ்ஜீவ் சிங் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் கொடுக்க  நீதிபதி உத்தம் ஆனந்த் மறுத்துவிட்டார்.  இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், நீதிபதி மனைவி அளித்த புகார் மனுவில், தனது கணவர் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார்.  அவர் நீண்ட நேரம் திரும்பி வராததால், அவரை தேடத்தொடங்கினோம். அப்போதுதான் அவர் ஆட்டோ மோதியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய  வந்தது. இந்த விவகாரத்திர் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், நீதிபதி இறப்பு விவகாரம் தொடர்பாக,  உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்து உள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கின் அத்தனை தகவல்களையும் ஒரு வாரத்திற்குள் சமர்பிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.