சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திமுக தேர்தல் அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.