சென்னை: ரேஷன் கடைகளில் இனிமேல் மாதத்தின் 30 நாட்களும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி கூறினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நியாயவிலை கடையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியாசமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியரிடம் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் உள்ள ஆவணங்களையும் பயோமெட்ரிக் கருவியையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். அதுபோல, இன்றும் ஆய்வு நடைபெற்றது. விரைவில் நியாயவிலை கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். பொதுமக்களின் வசதியை கருத்தில்கொண்டு இனிமேல் மாதத்தின் 30 நாட்களும் நியாயவிலைக் கடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.