டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஒட்டி வந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. இதுவரை டெல்லி எல்லையில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் கடந்த வாரம் முதல் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மாநில அரசின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.

தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருவதால், விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சியினரை ஈர்த்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும்  நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுபோல பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பஞ்சாப் மாநில எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட அம்மாநில எம்.பி.க்கள் சிலருடன் இன்று காலை தமது வீட்டில் இருந்துடிராக்டரில்  நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளின் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் (அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குகிறார்கள்,  மோடி அரசாங்கத்தின் கூற்றுப்படி, விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர், வெளியே (எதிர்ப்பாளர்கள்) அவர்கள் பயங்கரவாதிகள். ஆனால் உண்மையில், விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடக்க விடவில்லை. அவர்கள் இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் 2-3 பெரிய வணிகர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.

ராகுலைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சுர்ஜிவாலா, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருந்த பகுதி நோக்கி செல்ல  முயன்றார். ஆனால், அவரை இடைமறித்த காவல்துறையினர் அவரையும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.