டெல்லி: கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
மக்களின் வாழ்வாதாரம், நாட்டின், பொருளாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கல்வி நிலையங்களால் எதிர்கால சந்ததியினரான மாணாக்கர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருறிது. இதனால், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பள்ளிகளை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு வலு சேர்க்கும் வகையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்று தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் வசதி இல்லாத மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.
குஜராத் மாநிலத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அனுமதி கடிதத்துடன்50 சதவீத மாணவர்கள் வருகையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப், ஒடிசா உள்பட பல மாநிலங்களிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசும் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூலை 19ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தற்போது 10 மற்றும் 11ஆம், 12ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் பாடக் குறிப்பேடு, செயல்திட்ட குறிப்பேடு, தினமும் எழுதி அதை தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவர்கள் பள்ளிக்கு வந்து பயிலும் வகையில் பள்ளிகளை திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.