சென்னை: மயிலாடும்பாறை அகழ்வாய்வில் கிடைத்துள்ள மண்ணால் செய்யப்பட்ட தாழியை புறநானூறு பாடலுடன் ஒப்பிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டுள்ளார். அமைச்சரின் புலமையை சமூக ஆர்வலர்கள் மெச்சி பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் கடந்த வாரம், கல்திட்டையில் 70 செ.மீ., நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றை கண்டறிந்தனர். இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டாக கருதப்படுகிறது இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அகழாய்வு இயக்குநர் சக்திவேல் மயிலாடும்பாறை அருகே உள்ள சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால (2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது) ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு முன்னோர்கள் எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனர். இவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, தமிழக பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வாள் படத்தை பதிவிட்டு ‘ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’ 1948-ம் ஆண்டு வெளிவந்த அபிமன்யு திரைப்படத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வைர வரி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அங்கு மண்ணால் ஆன தாழி ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவும் பண்டை தமிழ் மக்களின் கலைத்திறனையும், வாழ்வியலையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்தும் தமிழக பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் புறநாநூறு பாடலை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார். அதில்,
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!
– புறநானூறு
#மயிலாடும்பாறை அகழ்வாய்வு
இந்த பதிவானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக ஆர்வலர்களும், அமைச்சரின் புலமையை வியந்து பாராட்டி வருகின்றனர்.