டில்லி

கொரோனா தடுப்பூசிகள் விலையை அதிகரித்து 66 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் விரைவில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை அளித்துள்ளதால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடெங்கும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   தற்போது மத்திய அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கிறது.   பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதையொட்டி இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.  உற்பத்தியாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் விலையான ரூ.150 இல் உற்பத்தியைப் பெருக்க முதலீடு செய்ய முடியாது எனக் காரணம் கூறி வேண்டுகோளை ஏற்கவில்லை.   எனவே மத்திய அரசு இந்த தடுப்பூசிகள் விலையை அதிகரித்துள்ளது.

அதன்படி ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.205 ஆகவும், கோவேக்சின் தடுப்பூசி விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  எல்லா வரிகளையும் சேர்த்து கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.215.25; கோவேக்சின் தடுப்பூசியின் விலை ரூ.225.75 ஆகும்.

சென்ற மாதம் 21-ந்தேதி அமலுக்கு வந்துள்ள புதிய தடுப்பூசி கொள்கையின்படி இவ்விரு தடுப்பூசிகளின் உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளது.   இந்த இரு தடுப்பூசிகளையும் மேலும் 66 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 37.5 கோடி ‘டோஸ்’களும், கோவேக்சின் தடுப்பூசி 28.5 கோடி ‘டோஸ்’களும் கொள்முதல் செய்யப்படுகிறது.    இது குறித்த ஆர்டர்களை முறையே இந்திய சீரம் நிறுவனத்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் மத்திய அரசு வழங்கி உள்ளது. இவை ஆகஸ்டு – -டிசம்பர் மாதங்கள் இடையே வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.