உளுந்தூர்பேட்டை: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால்,  உளுந்தூர்பேட்டை சந்தையில்  ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கிய அடுத்த மூன்று மணிநேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக குர்பானி கொடுத்து வருகின்றனர். இதை கடுமையாக செய்ய  முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, கால்நடைகளை அறுத்து குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கு மற்றும் அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். இதனால் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் ஆடுகள்  விற்பனை களைகட்டும்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை ஜூலை 21ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெறும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது.

அதுபோல, தென்மாவட்டங்களில் எட்டயபுரம், மேலப்பாளையம் ஆட்டுச்சந்தைகள் பிரசித்தி பெற்றவை. ஆனால், கொரோனா காரணமாக, திருநெல்வேலி மாவட்டம்  மேலப்பாளையத் தில் கால்நடை சந்தை திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகள் விற்பனை  களைகட்டியிருந்தது.  ரூ.2 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது,. வழக்கமாக சந்தையில் 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை ஆகும். ஆனால், இன்று காலை சந்தை தொடங்கிய 3 மணி நேரத்தில் சுமார் ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை  செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உளுந்தூர் பேட்டை சந்தையில், அண்டை மாவட்டங்களான  திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை அள்ளிச்சென்றதாக  சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.