சென்னை: சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்குவைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் மட்டும் கொசு ஒழிப்பு பணிக்கென ஆயிரத்து 262 நிரந்தரப் பணியாளர்களும், இரண்டாயிரத்து 359 ஒப்பந்தப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
டெங்கு கொசுப் புழுக்களை அழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சென்னை மாநகரில் உள்ள 500 வீடுகள் கொண்ட பகுதிகள் சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் உள்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசுப் புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகள், கிணறு, டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றில் கொசு புழுக்கள் இருப்பின் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 13ந்தேதி வரையிலான 13 நாட்களில் 11 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களில் தலா மூன்று நபர்களும் கோடம்பாக்கத்தில் இரண்டு நபர்களும் என மொத்தம் 11 நபர்கள் சென்னையில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.