டில்லி
இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார்
இந்திய அணி கிரிக்கெட் வீரரான யஷ்பால் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் விளையாடி 1,606 ரன்களும், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 883 ரன்களும் அடித்துள்ளார். 1983-இல் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அரைசதம் விளாசிய அவரது ஆட்டம் மிகவும் பிரபலமானது.
கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய அந்த போட்டியில் யஷ்பால் சர்மாவும் வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கினார். டில்லியில் வசித்து வந்த யஷ்பால் நேற்று காலை நடைப்பயிற்சிக்குச் சென்று, வீட்டுக்கு வந்த பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்கள், மகன் உள்ளனர். நேற்று லோதி ரோடு பகுதியில் உள்ள மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அவரது சகாக்களான கீர்த்தி ஆஸாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யஷ்பால் சர்மா மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகக் கோப்பையை வென்ற அணியின் தலைவராக இருந்த கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார். யஷ்பால் சர்மாவின் மரணம் குறித்து தம்மால் ஏதும் பேச முடியாத நிலையில் உள்ளதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் யஷ்பால் இறந்ததை தம்மால் நம்பவே முடியவில்லை எனக் கூறி கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார்.