டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் அரசியல் சாணக்கியர் (தேர்தல் வியூக நிபுணர்) பிரசாந்த் கிஷோர் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை எடுத்து, சாதித்து வருபவர் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர். இவர் தற்போது, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை அடியோடு அகற்றும் பணியில் எதிர்க்கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிரசாந்த் கிஷோர் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகின்றன. இதற்கான முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஈடுபட்டு வருகிறார். இவர் பல்வேறு  மாநிலக் கட்சிகளை  ஒன்றிணைந்து வருகிறார். இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோரும், பவாரும் 23 முறை சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இன்று காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தியுடன்  பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். . இந்த ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பிரசாந்த் கிஷோர், சமீப காலமாக   சரத் பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வந்த நிலையில், இன்று  ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள ஒன்றிணைந்து, பாஜகவை எதிர்கொள்ள அமைக்கப்பட்டுள்ள  மிஷன் 2024 என்ற திட்டம் தொடர்பாகவும்,  எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் குறித்தும் வாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘மிஷன்2024:’ மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்…