ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் மின்னல் தாக்கியதில் 18 பார்வையாளர்கள் உயிர் இழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமர் அரண்மனை அமைந்துள்ளது.  சுமார் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரண்மனையைக் காணத் தினமும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும்.   இங்குள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஒரு பைனாகுலர் அமைக்கப்பட்டு சுற்றுப்புறங்களைக் காணப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நேற்று மாலை ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் மழை பெய்துள்ளது.  அந்த சமயத்தில் அமர் அரண்மனையில் பல சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.  இவர்களில் 27 பேர் அரண்மனை கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி பைனாகுலர் மூலம் சுற்றுப்புறங்களைக் கண்டு களித்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது திடீர் என மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகினர்.  இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.  அதிர்ச்சி அடைந்த மீதமுள்ளோர் மேலே இருந்து குதித்துள்ளனர்.  இதில் படுகாயம் அடைந்தோரில் 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இவ்வாறு உயிர் இழந்தோரின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் கெலாத் அறிவித்துள்ளார்.