சென்னை: கூவத்தூரில் சசிகலாவுக்கு அடிமைகளாக இருந்தீர்களா? என முன்னாள் முதல்வரும், அதிமுக துனை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடியை முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய அமமுக துணைப்பொதுச்செயலாளருமான செந்தமிழன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக கூடாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சசிகலா அதிமுக நிர்வாகிகளிடம் பேசி, அதிமுகவுக்கு எதிரான வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறார். அவர் பேசும் வீடியோ அதிமுக தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் சசிகலா காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக முதல்வர் எடப்பா பழனிச்சாமி உள்பட நிர்வாகிகள், சசிகலாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினரகனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.
அதிமுகவில் நவக்கிரக தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே தங்களுக்குள் கருத்து வேறுபாடு உடையவர்கள். எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜக கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்கிறார். இதுவே முரணாக உள்ளது.
அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து இருந்தால், அம்மா ஆட்சி அமைந்து இருப்பது உறுதி என்றவர், அதிமுகவிற்கும், சசிகலாவிற்கு சம்பந்தமில்லையென எடப்பாடி பழனிச்சாமி பேச அறுகதை கிடையாது. அப்படியென்றால் கூவத்தூர் விடுதியில் முன்னாள் அமைச்சர்கள் அடிமைகளாக இருந்தனரா என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர்கள், எம்எல்ஏகள் அனைவரும் சசிகலா பெயரை உச்சரித்து தான் பேசினார். இது இன்றும் அவை குறிப்பில் உள்ளது. சசிகலாவிற்கு அதிமுகவுடன் தொடர்பில்லையென பேசுவது நகைச்சுவையாக உள்ளது. சசிகலா அறிவித்துள்ள சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் பெரும் திரளாக அவருக்கு ஆதரவு அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.