சென்னை: மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர்  ரங்கராஜன் குமாரமங்கலம்  மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த  மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்  ரங்கராஜன் குமாரமங்கலம்  மனைவி கிட்டி  டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி வழக்கறிஞர் திருமதி. கிட்டி குமாரமங்கலம் அவரது வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு எந்தளவிற்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த கொலை சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.
திருமதி. கிட்டி குமாரமங்கலம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவருமான திரு. மோகன் குமாரமங்கலம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.