சென்னை
தமிழகத்துக்கு வந்துள்ளதை விட 1,02,500 பேருக்கு அதிகமாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாகப் பாதிப்பு அடைந்தது. தற்போது சிறிது சிறிதாகப் பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது. ஆனால் விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்குப் பிரித்து அளிக்கிறது. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.
இன்று தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன், “இதுவரை தமிழகத்துக்கு 1,57,76,550 டோஸ்கள் தடுப்பூசி வந்துள்ளன. ஆனால் மொத்தம் 1,58,78,600 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது இதுவரை கிடைத்ததை விட 1,02,500 பேர் அதிகமாகப் பயன் அடைந்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொரோனா தடுப்பூசி அதிகாரிகள், “கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளிலும் 12 டோஸ்கள் மருந்து இருக்கும். ஆனால் அவை 11 டோஸ்கள் எனக் கணக்கிடப்படும். நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு 12 டோஸ்கள் அல்லது குறைந்தது 11 டோஸ்கள் வரை போட வலியுறுத்தி உள்ளோம். எனவே இந்த அதிகப்படியானோருக்குத் தடுப்பூசி போட முடிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.