சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத்தை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த அணை கட்டினால், தமிழகத்திற்கு வரும் காவிரி தண்ணீர் தடைபடும் நிலை உருவாகும். அதனால், மேகதாது அணை கட்டுவதை ஏற்க முடியாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக முதலைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனை டெல்லி சென்று மத்தியஅமைச்சர்களை சந்தித்து பேசி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி டெல்லி சென்றுள்ள தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்துவார் என்றும், தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிக்க உள்ள துரைமுருகன், நடுவர் மன்றம் அமைக்கவும் கோரிக்கை வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவையும் மத்திய அமைச்சரிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.