சென்னை: சென்னையில் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஜூலை 12ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகள்,  உணவகங்கள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையைடுத்து, இன்று சென்னையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தவர், சென்னையில் உள்ள வியாபாரிகள், கடையில் பணிபுரிபவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த உள்ளோம் என்று கூறினார். மேலும், உணவக ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், கோயம்பேடு சந்தையில் உள்ள 18 ஆயிரம் வியாபாரிகளுக்கு இதுவரை  தடுப்பூசி போடப்பட்டுள்ளது – இன்றும் தெரிவித்தார்.