சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான  புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, அதற்கான மாதாந்திர பிடித்தம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக் கான மருத்துவ காப்பீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் 72000க்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையில் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, அதற்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2020 ஜூன் மாதம் முடிந்துவிட்டது.

கொரோனா காரணமாக காப்பீட்டு அட்டையை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அறுவை சிகிச்சைக்கு ரூ.4 லட்சம், அதிகபட்சம் ரூ 7.5 லட்சம் வரை இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் செலவழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து,  அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக தமிழகத்தில் 12 லட்சம் ஊழியர்களிடமிருந்து மாதம் 150 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. அதன்படி, ஆண்டுக்கு 259 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பிடித்தம் செய்யப்படும் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.  அதன்படி, இனிமேல் மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ.300 பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான காப்பீடு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்காமல் தமிழக அரசே செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.