டெல்லி: கொரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்’ என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பிட்ட 80 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் நீடித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் 3வது அலை விரைவில் பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்தியஅரசு, ஜூலை மாதத்திற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, 10 சதவீதத்துக்கு அதிகமான கொரோனா பாதிப்பு விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்தியஅரசு மாநிலஅரசுகளுக்கு  கடிதம் எழுதி உள்ளது. இந்த வகையில் ராஜஸ்தான், மணிப்பூர், சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, ஒடிசா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, கேரளா, அருணாசலபிரதேசம், இமாசல பிரதேசம், அசாம் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம்  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

கொரோனா பாதிப்பு விகிதம், தேசிய அளவில் 5 சதவீதத்துக்குள் இருந்தாலும், சில மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் இது 10 சதவீதத்தையும் தாண்டி இருக்கிறது.

ஜூன் 21-27 தேதிகளுக்கு இடையே கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்,  மாவட்ட அளவிலும் நடவடிக்கைகள் வாயிலாக கொரோனா நிலவரம் குறித்து கடுமையான கண்காணிப்பு நடத்த வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே மாநிலம் முழுவதும் நெகிழ்வுத்தன்மையையும், தளர்வுகளையும் அனுமதிக்கிறபோது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 சதவீதத்துக்கும் மேலாக பாதிப்பு விகிதம் கொண்ட மாவட்டங்களில் புதுச்சேரியின் மாஹி, கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், கொல்லம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.