சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் துறையில் நடைபெற்ற பணி நியமன முறைகேடு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் பணி நியமனங்களை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே நியமிக்க வேண்டும். ஆனால்  பல பகுதிகளில், கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமனம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  ஆவின் நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து, திமுக ஆட்சி பதவி ஏற்றதும் விசாரணை நடத்தியது. அதில், ஆவின் பணி நியமன முறைகேட்டில் உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களும், நிர்வாக குளறுபடிகளும் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், இந்த பணி நியமன முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் ஊழல் தடுப்பு பிரிவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்று செய்தியளார்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்,  ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், ஆவின் பணி நியமனங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை அடுத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.