சென்னை

ரும் செப்டம்பர் மாதம் கண்ணாடி தரையுடன் கூடிய தொங்கு பாலம் வில்லிவாக்கம் ஏரியில் திறக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன.  இந்த நீர்நிலைகளில் 40 குளங்கள் கார்ப்பரேட் நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழும் 70 குளங்கள் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிதியின் கீழும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.   இவற்றில் ஒன்றான வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஏரி ரூ. 10 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகின்றது.

வில்லிவாக்கம் ஏரி சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த ஏரி தூர்வாரப்பட்டு ஏரியின் கொள்ளளவு 20000 கன மீட்டரில் இருந்து 70000 கன மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஏரியைச் சுற்றி குழந்தைகள் பூங்கா, உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடம், விளையாடும் இடங்கள், திறந்தவெளி திரையரங்குகள், எல்.இ.டி. விளக்குகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் குளத்தின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் செல்லும் வகையில் தொங்கு பாலம் ஒன்றைச்  சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது.  இந்த பாலம் 250 மீட்டர் நீளம் கொண்டதாக அமைய உள்ளது.  இது சிங்கப்பூரில் உள்ள மாக்ரிட்சி டிரீ பாலத்தின் வடிவில் அமைக்கப்படுகிறது.   இந்த பாலத்துக்குச் செல்ல படிகள் மற்றும் லிஃப்ட் வசதிகள் செய்யப்படுகின்றன.

ஏரியின் நடுவில் உணவகங்கள் அமைக்கப்பட்டு அதற்கு இந்த பாலம் மூலம் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.   இந்த பாலத்தின் தரைப் பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த பாலத்தின் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.   வரும் செப்டம்பர் மாதம் இந்த ஏரி பொதுமக்களுக்கு திறக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.