மும்பை: காவல்துறையினரிடமே மாதம் ரூ.100கோடி மாமுல் வசூலித்து தர வேண்டும் என்று கட்டடளையிட்ட விவகாரம் தொடர்பாக பதவியை இழந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறைஅமைச்சர் அனில்தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது உணவகங்கள், மது விடுதிகளில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தர வேண்டும் என கூறியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றஞ்சாட்டினார். முன்னதாக தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிப்பொருட்களுடன் கார் சிக்கிய வழக்கு, அதைத்தொடர்ந்து காரின் உரிமையாளர் மர்ம மரணம் போன்றவை மாநி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பணி மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனில்தேஷ் முக் மீதான விவாரம் வெளியே வந்தது.
இதன் அடிப்படையில் தேஷ்முக் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தன. இதையடுத்து ஏப்ரல் 5ஆம் நாள் அமைச்சர் பதவியில் இருந்து தேஷ்முக் விலகினார். அவர்மீது விசாரணை நடைபெற்று வருஐகிறது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். நாக்பூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதே வேளையில், மற்றொரு பிரிவினர், வொர்லி பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த புகார் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மும்பை காவல் துணை ஆணையர் ராஜு புஜ்பாலிடம் வாக்குமூலம் பெற்ற அமலாக்கத்துறையினர், அதன் அடிப்படையில் இன்று நாக்பூரில் அனில் தேஷ்முக் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.