சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் புதியதாக தொடங்கிய ’உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறை முதல் இதுவரை 75 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் பரப்புரையின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ என்ற நிகழ்வின் மூலம் மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வந்தார். இந்த மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் குறைகள் களையப்படும் என வாக்குறுதி வழங்கினார். அதையடுத்து, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றி முதல்வராக பதவி ஏற்றதும், தேர்தல் பிரசாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அத்துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.
அவரது தலைமையிலான துறையினர், பொதுமக்களிடம் பெற்ற 4 லட்சம் மனுக்களை, தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வகையில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த புகார் மனு தொடர்பாக மனுதாரர்களுக்கு , தனி அடையாள எண் வழங்கப்பட்டு, அது தொடர்பான குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது.
மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், அதன் உண்மை தன்மை போன்றவற்றை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றியபோது, ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் இன்று காலை வரை 75,546 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.