சென்னை
கொரொனா நிவாரண நிதியான ரூ.2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை வரும் 25 ஆம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 உதவி தொகை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி சென்ற மாதம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் இரண்டாம் தவணையான ரூ.2000 ஆகியவற்றை வழங்கும் திட்டம் முதல்வரா தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்குத் தமிழக முதல்வர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் வரும் 25 ஆம் தேதிக்குள் இரண்டாம் தவணையான ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.