சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில நாட்களில்கொரோனாதொற்று முடிவுக்கு வரும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறத. அப்போது, அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு நடவடிக்கை, மருத்துவ இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிற்கே தடுப்பூசி வழங்கும் அளவில் தடுப்பூசி தயாரிக்கும் மையம் தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்று நேரடியாக மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். விரைவில் அனுமதி பெற்று தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திற்கு மத்தியஅரசிடம் இருந்து வர வேண்டிய தடுப்பூசிகள் சரியான நேரத்தில் வந்தால் அனைவருக்கும் தடுப்பூசி என்ற நிலையை எளிதாக எட்டி விடலாம். ஆனால், தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் தற்போது மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக 4, 5 மணி நேரமானாலும் பொது மக்கள் வரிசையில் பொறுமையாக காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இது இந்த அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர் ஏற்பட்டுள்ளது.
கொரோனா 3வது அலை வரக்கூடாது என நினைக்கின்றோம். அப்படி வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. தேவையான ஆக்சஸிஜன் படுக்கைகள், மற்றும் மருத்துவ வசதிகள் தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2,510 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 130 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சமீப நாட்டிகளில் தொற்று பரவலில் பெரிய சரிவு வந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தொற்றே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.