கொல்கத்தா
விவசாயிகள் உரிமைக்காகத் தாம் தொடர்ந்து போராட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளைத் தோற்கடித்துக் கடந்த 2011-ல் மம்தா, முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தார். அவரது வெற்றிக்கு சிங்கர் நில மீட்பு போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அவர் ஆட்சிக்கு வந்த பிறகு சிங்குர் நில மறு பயன்பாட்டுச் சட்டத்தை அவர் கொண்டு வந்தார்.
இதையொட்டி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேற நேரிட்டது. நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவையில் சிங்குர் நில மசோதா நிறைவேறியதன் 10-ம் ஆண்டு தினத்தை மம்தா நேற்று நினைவு கூர்ந்தார்.
அவர் தனது டிவிட்டரில் இது குறித்து, “மத்திய அரசின் அலட்சியத்தால் நமது விவசாய சகோதரர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து போராடுவோம். விவசாயிகளின் உரிமைகளை நிலை நிறுத்துவது நமது முதன்மை முன்னுரிமையாக இருக்கட்டும்” எனப் பதிந்துள்ளார்
மம்தா பானர்ஜி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்குத் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்