சென்னை: கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வெளியிட்டு உள்ளார். அதில், கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்ப பெறப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 38 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு 50 ஆயிரமாக தாண்டும் என கூறப்பட்ட நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது 15 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுக்கான பற்றாக்குறை இல்லை எனவும், தேவைப்படுவோருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கூடிய அரசு உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியால் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாகவும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, மக்கள் இந்த ஊரடங்கை முறையாக கடைபிடித்ததால் தான் தற்போது கொரோனா தொற்று காட்டுக்குள் வந்ததாகவும், ஊரடங்கை முழுமையாக கடைபிடித்த மக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க சொல்லி பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து இருந்ததாகவும், மக்களின் எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என்று தான் சொன்னேனே தவிர, முழுமையாக தொற்று பாதிப்பு குறையவில்லை. எனவே மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மக்களின் நெருக்கடிகளை உணர்ந்து தான் கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதற்காக அவசியம் இன்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் நமக்கு நாமே தான் முழுமையான பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், துணிக்கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடக்க வேண்டும் எனவும், முடிதிருத்தும் கடைகளில் முறையாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடுமையான பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் போலி மது, கள்ள மது போன்ற தீமைகளால் தமிழக மக்கள் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கும் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். மேலும், கொரோனா காலகட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்டுப்பாட்டை மீற கூடிய மக்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும் தீமை செய்யக்கூடியவர்கள் என்பதை உணரவேண்டும். தமிழக மக்கள் காவல்துறையின் கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுள்ள மக்களாக இருக்க வேண்டுமென தான் விரும்புவதாகவும், அந்த விருப்பத்தை தமிழக மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று தான் நம்பிக்கை வைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும், விரைவில் பொது போக்குவரத்து சேவைகள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றை திறக்க வேண்டும். இதற்கு மக்கள் துணை அவசியம், மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம் எனவும் கூறியுள்ளார்.