டெல்லி:  இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் சேர்க்கை 13.4 % சரிவு கண்டுள்ளதாகவும்,  மருத்துவ சேர்க்கை 51% உயர்ந்துள்தாகவும் மத்தியகல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய உயர் கல்வி ஆய்வு பிரிவு, நாடு முழுவதும் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2019–-20ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை  வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஆய்வுக்கு நாடு முழுவதும்  உள்ள 1,043 பல்கலைக்கழகங்கள், 42,434 கல்லூரிகள், 11,779 சுயநிதி கல்வி நிறுவனங்கள்  உட்படுத்தப்பட்டன.

கடந்த 2019-–20 கல்விஆண்டில் 3.85 கோடிபேர் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதில் 1.96 கோடி பேர் மாணவர்கள். 1.89 கோடி பேர் மாணவிகள்.

கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை 51.1 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இதே காலகட்டத்தில் என்ஜீனியரிங் கல்வி மாணவர் சேர்க்கை 13.4 சதவீதம் சரிந்திருக்கிறது.

உயர்க் கல்வி மாணவர் சேர்க்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 2–-வது இடத்திலும் தமிழகம் 3-–வது இடத்திலும் உள்ளன.  ராஜஸ்தான், கர்னாடகம், மத்தியப் பிரதேச மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

நாட்டின் உயர்க் கல்வி நிறுவனங்களில் 78.6 சதவீத நிறுவனங்கள் தனியாரை சேர்ந்தவை.

அதிகபட்சமாக ஆந்திராவில் 81%, தெலுங்கானாவில் 80%, உத்தரப்பிரதேசத்தில் 78.5%, தமிழகத்தில் 77.6 சதவீத தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.