சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலையின் கடும் தாக்கத்தால் பாதிப்பு கடுமையாக உயர்ந்தது. அதுபோல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்த 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில்வ உள்ளது. இந்த பொதுமுடக்கம் வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனையின்போது, தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும், கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது நன்மை பயக்கும் என உயர் அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, ஊரடங்கு மேலும் ஒருவாரம் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் வாயப்பு உள்ளதாகவும், வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்கவும் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நடைபயிற்சி உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிக்கவும் டாஸ்மாக் கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்கவும், கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்கவும் தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.