கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறை இதுதான் என்று இன்றுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் வரையறுக்கப்படவில்லை.
ஐடிராக்சி-க்ளோரோகியூனோன் என்ற மருந்து பலனளிப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது, பின்னர் இவர்மேக்ட்டின், கோல்சிசின், பிளவிபிரவிர், ரெம்டெசிவிர் என்று வெவ்வேறு மருந்துகள் பலனளிப்பதாக கூறப்பட்டது.
இப்படி சிகிச்சைக்கான முறைகளை அடிக்கடிமாற்றுவதால் மருத்துவர்களுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் பாதிப்பை பொறுத்து வெவ்வேறு மருந்துகள் பலனளிப்பதால், நோயாளிகளிடம் எந்த ஒரு மருந்தும் பரிட்ச்சார்த்தமாகவே பயன்படுத்தப்படுகிறது, இதற்கு வேறு வழியில்லை, அதேவேளையில் இது நோயாளிகளுக்கும் வேதனையளிப்பதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவிக்கும் முன்பு வரை இந்த மருந்துக்காக தட்டுப்பாடு நீடித்துவந்தது, அந்த நேரத்தில் இந்த மருந்து ஒரு சிலருக்கு உண்மையாகவே தேவைப்பட்டது, அப்படி தேவை இருந்தவர்களும் மருந்து கிடைக்காமல் இறக்க நேரிட்டது.
காலம் தாழ்ந்த அறிவிப்பாக இருந்தாலும் உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பு வரவேற்க தக்க ஒரு அறிவிப்பு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உலக சுகாதார அமைப்பு பலதரப்பட்ட நோயாளிகளின் தரவுகளை ஆய்வு செய்தபின் இந்த முடிவை எடுத்திருந்தாலும் ஆக்சிஜன் தேவை படும் நோயாளிக்கு ஆரம்ப கட்டத்திலேயே ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது என்றும் சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்து கைகொடுக்கிறதோ இல்லையோ, ஸ்டெராய்டு மற்றும் ரத்தத்தை மெலியச்செய்ய உதவும் இனாக்சாபரின் மற்றும் டல்டிபரின் வகை மருந்துகள் தான் சிறந்த தீர்வு என்று கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா