மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு 7000 க்கும் அதிகமான பாதிப்புகளால் சென்னையை சீரழித்து வந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, பதவியேற்ற இரண்டு வாரத்தில் 2000 க்கும் குறைவான பாதிப்புக்குள் கொண்டு வந்து சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் நாட்டிலேயே மிகவும் முக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது டாக்சி ஆம்புலன்ஸ் திட்டம் என்று பிரதமரின் பார்வைக்கு பட்டியவிடப்பட்ட திட்டத்தை செயல்படுத்திய பெருமை ககன் தீப்பையே சேரும்.
1993 ம் ஆண்டு தனது ஐ.ஏ.எஸ். படிப்பை முடித்த அவர் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருந்தபோதும் தான் ஏற்றுக்கொண்ட பணியில் ஓர் இளம் பணியாளரைப் போன்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர் என்று சக அதிகாரிகளால் பாராட்டப்படுபவர்.
குறைந்த அளவு பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் கிடைக்காமலும் அல்லாடிய நேரத்தில் டாக்சி ஆம்புலன்ஸ் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி குறைந்த அளவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவி மற்ற ஆம்புலன்ஸ்களை மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட செய்து துரிதகதியில் பணியாற்றியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணியையும் செயல்படுத்தியதோடு வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கும் தடுப்பூசி செலுத்தும் உன்னத பணியை மேற்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
பேரிடர் மேலாண்மையில் தனக்கிருந்த அனுபவத்தை திறம்பட செயல்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ககன் தீப் சிங் பேடி, இதற்கெல்லாம் மாநகாராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட தனது சக ஊழியர்களின் ஒத்துழைப்பே காரணம் என்று பணிவுடன் கூறுகிறார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி, ஜொமாட்டோ உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருதி தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்தி வரும் சென்னை மாநராட்சி அடுத்து வரும் நாட்களில் காய்கறி, மளிகை வாங்க கோயம்பேடு செல்லும் வியாபாரிகளுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்த இருப்பது குறிப்பிடதக்கது.
முதல் அலை பொதுமுடக்கத்திற்குப் பின் கொரோனா பரிசோதனை கூட மேற்கொள்ளாமல் வியாபார நிறுவனங்களை திறந்துவிட அனுமதி அளித்த நிலையில் இரண்டாவது அலை பொதுமுடக்கத்தின் போது தடுப்பூசி போடுவதை முறைப்படுத்தி வரும் மாநகராட்சி ஆணையரின் செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.