டெல்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் டெல்லி எல்லையை விட்டு வெளியேறமாட்டார்கள் என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இன்று 191வது நாளை எட்டி உள்ளது.
மொடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 26 ந்தேதி அன்று டெல்லியில் போராட்டத்தை முதன்முதலாக தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தலைநகரில் குவிந்தனர். 2021 ஜனவரி 26ந்தேதி டிராக்டர் பேரணியை நடத்தி மத்தியஅரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தினர். இன்று வரை தலைநகரில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 6 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடும் குளிர், வெயில் பாராமல் விவசாயிகள் தங்கது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றம் எடுத்த முடிவுகள் தோல்வியை சந்தித்தன. இதனால் விவசாயிகளின் போராட்டம் 200வது நாளை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், மத்திய அரசு நமது போராட்டத்தை டெல்லியில் இருந்து அரியானாவுக்கு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அரசு அதனுடைய சூழ்ச்சியில் வெற்றிபெற விடமாட்டோம். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம், இதற்கான எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.