திருப்பூர்: கொரோனா முழு ஊரடங்கிலும்  தொழில்நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்ககப்பட்டுள்ள நிலையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய 27 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுஉள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முன்னெடுத்து வருகிறது. பொதுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமுடக்க விதிகளை மீறுவோர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமுடக்கத்தின்போது, பெரு நிறுவனங்கள் 50சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திருப்பூரில் பல நிறுவனங்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான நிறுவன்ங்கள் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் அணைப்புதூரில் உள்ள ஏஜிகே மார்க்கெட்டிங் என்ற பனியன் நிறுவனத்தில் ஊரடங்கு விதிகளை மீறி 140க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு நிறுவனம் இயக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த  வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது , அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது .

இதனையடுத்து , சுகாதாரத் துறையினரை வரவழைத்து தொழிலாளர்களுக்கு, அங்கு பணியாற்றி வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 47 பெண் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால்  அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்து, அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். மேலும் உடன் பணியாற்றியவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதுபோல திருப்பூர், குமாரப்பாளையம் பகுதிகளில் விதிகளை மீறி இயங்கி வந்த  5 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.