சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500 நோயாளிகள் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து பரிதவிக்கின்றனர். அந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்குமாறு பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது நிவாரண உதவியை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது