சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விற்பனை செய்ய விரும்புபவர்கள், இன்றுமுதல் பாஸ் பெற விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், பொதுமுடக்கத்தை தமிழகஅரசு, மே 7ந்தேதி வரை நீட்டித்துள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இடையூறி இன்றி கிடைக்கும் வகையில், மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னையில், வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும்,  சுமார்  7000 வியாபாரிகள் விற்பனை செய்ய  பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி,  இன்று முதல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ்  வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் படி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும்  தெரிவித்தார்.