டில்லி

கொரோனா மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு அதிக  ஆபத்து ஏற்படாது என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.   தினம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.  மேலும் மரணமடைந்தோர் எண்ணிக்கையும் தற்போது 3 லட்சத்துக்கும் மேல் சென்றுள்ளது.  இந்த அலையில் இளைஞர்கள் மற்றும் இணை நோய் இல்லாதோரும் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் விரைவில் கொரோனா மூன்றாம்  அலை தொடங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.  மூன்றாம் அலையின் போது வயதில் மிகவும் சிறியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகம் பதிப்பு ஏற்படும் என இந்தியக் குழந்தை நல மருத்துவர் பயிற்சி மையம் தெரிவித்தது.  மேலும் இந்த மூன்றாம் அலையின் போது குழந்தைகளுக்கு மட்டுமே அதிகம் பாதிப்பு இருக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வாராந்திர கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது.  இதில் எய்ம்ஸ் மருத்துவ இயக்குநர் ரந்தீப் குலேரியா கலந்துக் கொண்டார்.  அப்போது மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லாவ் அகர்வால், “கொரோனாவால் மரணம் அடைந்தோரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களே ஆவார்கள்.  இதுவரை குழந்தைகளுக்கு லேசான தொற்று மட்டுமே ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அப்போது  ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம், “இதுவரை கிடைத்த விவரங்களின்படி குழந்தைகளிடையே அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கும் லேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது.   மேலும் இரு அலைகளிலும் வைரசின் குணநலன் ஒரே மாதிரியாக உள்ளன.  எனவே மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்படாது” எனத் தெரிவித்துள்ளார்.