சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா 2வது அலையின் பரவலை தடுக்க தமிழகத்தில் இன்றுமுதல் ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது வீடியோ பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். தமிழகத்தில் புதுசா அரசு அமைந்து இரண்டு வாரங்கள் தான் ஆகியுள்ளது. இந்த ரெண்டு வாரத்துல ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் , பெண்கள் எல்லாருக்கும் சாதாரண கட்டண பேருந்தில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலை, இழப்பீடுகள், தூத்துக்குடி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது . எழுவர் விடுதலைக்காக குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் செலவுத்தொகை பெறலாம் என அறிவித்து இருக்கிறோம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்படி பெறப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றம் இப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
இது எல்லாவற்றையும் விட முக்கியமானது கொரோனோ தடுப்பு பணிகள் தான். கடந்த ரெண்டு வாரத்துல 17,000 புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 1.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதுசா 2, 100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி வருகிறோம்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இன்று முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறு சலுகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அதை சிலர் தவறாக பயன்படுத்தி வெளியில் சுற்றி திரிந்ததால் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்துகொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்து தான் ஆனால் அதை எடுத்து அருந்தியே ஆகவேண்டும். தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
[youtube-feed feed=1]