நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை உச்சம்பெற்று வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ள பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருபுறம் மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில், தனியார் ஆய்வகங்களும் பணத்தை பிடுங்கி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா தொற்று உள்ளதா இல்லைய என்பதை கண்டறியும், ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவி சோதனைக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் நிறுவனம் வீட்டில் வைத்தே கொரோனாவை கண்டறியக்கூடிய ரேபிட் ஆன்டிஜன் கருவியை உருவாகியுள்ளது. இந்த கருவி 15 நிமிடங்களில் கொரோனா உள்ளதா இல்லையா என்பது குறித்த முடிவுகளை தெரிந்து கொள்ள உதவுவதுடன் இதன் விலையும் 250 ரூபாய் மட்டுமே. இந்த கருவி மூலம் சோதனை செய்ய மத்தியஅரசு இதுவரை அனுமதி வழங்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கருவி மூலம், கொரோனா பாதிப்பு குறித்து சந்தேகப்படும் நபரின் மூக்கில் உள்ள சளி மாதிரி எடுத்து இந்த கருவியில் வைத்து சோதனை செய்தால், கொரோனா உள்ளதா இல்லையா என்பது தெரிய வரும். இந்த கருவி உபயோகப்படுத்த இந்திய மருத்துவ கவுன்சில் கழகம் முதல் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து IMCR வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த கருவியின் பரிசோதனையை கண்மூடித்தனமாக நம்பி விடக்கூடாது எனவும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் இக்கருவியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்று கருதப்படும் எனவும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை எனவும், அவர்கள் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,
இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படக்கூடிய ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.