புனே
கொரோனா நோய்க்கு பின் ஏற்படும் கருப்பு புஞ்சை தொற்றுக்கான சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்கும் புதிய திட்டத்தை புனே மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பலருக்கு அதற்குப் பிறகு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது., மியோகோர்மைகோகிஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தொற்றினால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்த தொற்று சுற்றுச் சூழல் கிருமிகளை எதிர்கொள்ளும் திறன் அற்றவர்களை பெரும்பாலும் பாதிக்கிறது. மேலும் அதிக அளவில் ஸ்டிராய்ட் மருந்து எடுத்துக் கொண்டவர்களும் இதனால் பாதிப்பு அடைகின்றனர்.
இந்த நோயால் பார்வை இழப்பு, நுரையீரல் பாதிப்பு ஆகியவற்றுடன் ஒரு சிலருக்கு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு, கண்களைச் சுற்றி வலி, சிவப்பு நிறத்தில் தடிப்பு, தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், ரத்தக் கசிவுடன் வாந்தி, சளியின் நிறமாற்றம் ஆகியவை அறிகுறிகள் ஆகும். இதற்கான சிகிச்சை அவசியமாகும். இந்த தொற்று மகாராஷ்டிராவில் குறிப்பாக புனே நகரில் அதிகம் காணப்படுகிறது.
இதையொட்டி புனே மாநகராட்சி ஒரு புதிய நிதி உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. புனே மாநகராட்சி தற்போது ஒரு சில நோய்கள் சிகிச்சைக்காக நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நோய்களின் பட்டியலில் தற்போது கருப்பு பூஞ்சை தொற்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நோய் சிகிச்சகாக நகரில் உள்ள 140 மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏழைகளுக்கு இந்த சிகிச்சைக்கான காப்பீடாக ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.