சென்னை: திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே, திருமண விழாவில் கலந்துகொள்ளும் வகையில் இ-பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 17ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இதிலுள்ள திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்தி பயணிப்பதாக புகார் எழுந்தது. போலியான திருமண அழைப்பிதழ்களை பதிவேற்றி விட்டு, வெளியூர் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இ-பதிவில் இருந்து திருமணம் எனும் பிரிவையும் நீக்கி தமிழகஅரசு உத்தரவிட்டது. இது சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. குடும்பத்தினரின் முக்கிய திருமண நிகழ்வுக்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் என்ற பிரிவை தமிழக அரசு சேர்த்துள்ளது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க பொது மக்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியது. ஆனால், இதையும் பலர் தவறாக பயன்படுத்தினார். அதனால், மீண்டும் இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையாகி உள்ளது.
இந்த நிலையில், திருமண அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, இ-பதிவு முறையில் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.