சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னை தேனாம்பேட்டையில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனை செல்லும் முன்பே வாகனத்தில் ஆக்ஸிஜன் உதவி பெறும் வகையில் நடமாடும் ஆக்ஸிஜன் வாகனங்களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் கொரோனா  தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறியதுடன், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை நாளை (வியாழக்கிழமை)  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக  9 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் 4 ஆயிரத்து 300 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் இவற்றை, குறைந்த அளவில் தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.