சென்னை: சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காததால், மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே மிக அதிகமாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 4,44,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று மட்டும் 86 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 5,851 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 3,90,364 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 48,156 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 16,31,291 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இரு தினங்களுக்கு முன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாத காரணத்தினால், ஆக்சிஜன் வசதிக்காக ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதுவரை போன்ற நிலை உருவானது. அப்போது, அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருக்கும் நிலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையில் நிற்க தொடங்கின. இதனால், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே தங்கியிருக்கும் அவலநிலை ஏற்பட்டது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது.