கொல்கத்தா

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலாகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.  நேற்று 20,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,94,802 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 136 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,993 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 19,131 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,50,017 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,31,792 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலாக்கப்படுகிறது.  இந்த முழு ஊரடங்கின் போதுஅனைத்து  பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருக்கும்.  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.

 ஊரடங்கின் போது அத்தியாவசிய அவசர சேவைகள மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மால், ஷாப்பிங் வளாகங்கள், உணவகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும். மளிகை உள்ளிட்ட சில்லறைக் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை  பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கும். மருந்து கடைகள் வழக்கம் போல திறந்திருக்கும். பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும் .

அவசர ஊழியர்களுக்கு மட்டும் உள்ளூர் ரயில் மற்றும் பேருந்துகளில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தவிரத் தனியார் கார்கள் மற்றும் டாக்சிகள் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் மெட்ரோ ரயில் சேவை, அவசரக்கால சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

மாநிலத்தில் அனைத்து அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார மத கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பேக்கேஜிங் சேவைகள் தவிர, மற்ற அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி பிரிவுகள் மூடப்பட்டிருக்கும்.