க்னோ

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளைச் சரி வர கவனிக்கப் படுவதில்லை எனப் புகார்கள் அதிகரித்து வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ள உ பி மாநிலத்தில் நேற்றுவரை 15,24,767 பேர் பாதிக்கப்பட்டு அதில் 15,742 பேர் உயிர் இழந்துள்ளனர்.   நேற்று வரை 12.84 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 2.25 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களுடைய சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனையில் படுக்கைகள் ஒதுக்க அதிகாரிகளை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.    ஆனால் அதிகாரிகள் தொலைப்பேசி அழைப்புக்களுக்குப் பதில் அளிக்காமல் உள்ளனர்.  இதனால் பல கொரோனா நோயாளிகள் பல தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்கின்றனர்.  அத்துடன் ஆக்சிஜன் தேவைகளையும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

உபி மாநில பரேலி மாவட்டத்தில் முதல்வர் கொரோனா நிலை குறித்த ஒரு சந்திப்பை மே மாதம் 8 ஆம் தேதி நிகழ்த்தி உள்ளார்.  அதில் உ பி மாநில பரேலி தொகுதியில் மக்களவை உறுப்பினரும் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான சந்தோஷ் குமார் கங்க்வார் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அமைச்சர் கங்க்வார் அரசு அதிகாரிகள் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்புக்களுக்குப் பதில் அளிப்பதில்லை எனவும் இதனால் மக்கள் அதிக செலவு வைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்   மேலும் இதே புகாரை அவர் உ பி முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு எழுதிய கடிதத்திலும் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் ,”மருத்துவமனைக்கு அவசியத் தேவையான வெண்டிலேட்டர் போன்ற பல பொருட்கள் முன் எப்போதையும் விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் அரசு இதற்கான சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவி உடனடித் தேவை என்பதால் அரசு மருத்துவமனைகளை அணுகுகின்றனர். அங்கு அவர்களுக்கு இட வசதி கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் சென்று அங்கு ஒரு பரிந்துரை பெற்று வந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இட வசதி கிடைக்கிறது அதற்கு நிறையப் பணம் மற்றும் நேரம் செலவாகிறது.

ஆக்சிஜன் தேவைப்படாத சிலர் அதை வாங்கி இருப்பில் வைத்துள்ளனர்.  தற்போது அவற்றை அவர்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.   அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்புக்களுக்குப் பதில் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தல்வீர் சிங்

இந்த கடிதத்தைத் தொடர்ந்து உபி மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தல்வீர் சிங் ஆக்சிஜன் முறைகேடுகள் குறித்து முதல்வருக்கு, “அலிகார் மாநிலத்தில் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.  அதற்காக பல கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் குறிப்பிட்ட சில மையங்களில் ஒரு சிலரின் சிபாரிசால் 50 முதல் 60 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் அளிக்கப்படுகிறது.  இந்த முறைகேட்டில் மாநில நிர்வாகத்தின் தலையீடு உள்ளது.   இந்த மாவட்டத்தில் ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஒரு விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டு முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மையங்களில் நோயாளிகளுக்கு அரசு இலவசமாக வழங்கும் ஆக்சிஜன் மணிக்கு ரூ.1000 என்னும் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.  இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.  அதே வேளையில் ஒரு சிலர் இந்த சட்டவிரோத  ஆக்சிஜன் விற்பனை மூலம் ஏராளமான பொருள் ஈட்டுகின்றனர்” எனக் கடிதம் எழுதி உள்ளார்.