ஜெய்ப்பூர்
கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 7,56,707 பேர் பாதிக்கப்பட்டு 5,665 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,50,853 பேர் குணம் அடைந்து தற்போது 2,00,189 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அம்மாநில மக்களுக்கு மிகவும் மகிழ்வை அளித்துள்ளது,
அந்த அறிவிப்பின் படி முக்கிய மந்திரி சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க கெலாத் அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் நன்மை மாவட்ட ஆட்சியரால் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கும்.
2021 ஆம் வருடம் மே 1 தேதியிட்ட அறிக்கையில் மாநில அரசு சிரஞ்சீவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அரசாங்கம் இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்த்துள்ளது.
முக்கிய மந்திரி சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய ராஜஸ்தான் மாநில சுகாதார காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருணா ராஜோரியா உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் வரும் அனைத்து நபர்களுக்கும் சிகிச்சையளிக்க மறுக்கும் எந்தவொரு மருத்துவமனை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.