சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மற்றும் அன்பழகன் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, கோபாலபுரம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்கலங்கினார். தொடர்ந்து தயார் தயாளு அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் முழங்காலிட்டு அமர்ந்து மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றார். பின்னர் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு அவர் சென்று மரியாதை செலுத்தினார்.