‘தபங் 3’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் – பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ராதே’. இப்படத்தில் திஷா படானி, ரன்தீப் ஹூடா, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ‘வெடரன்’ என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.
இந்த படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி ரூபாய்க்கு சல்மான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனால், ராதே வெளியீடு தொடர்பாகக் குழப்பம் நீடித்து வந்தது. இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சல்மான் கான் இந்தத் தகவலை மறுத்து திரையரங்கில் தான் ‘ராதே’ வெளியாகும் என்று தெரிவித்தார். பலமுறை வெளியீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இறுதியாக, ரம்ஜான் விடுமுறையைக் கணக்கில் கொண்டு மே 13-ம் தேதி ‘ராதே’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
மே 13-ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகும் அதேநாளில் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஓடிடியில் பார்க்க விரும்புவோர் அதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த டைட்டில் ட்ராக் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ராதே திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.