ஜெனிவா: உலக கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு உள்ள நாடு இந்தியா என உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. மொத்த பாதிப்பில் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 439- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780- பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், உலக அளவிலான கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவிலேயே உள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இருமுறை உருமாறிய E484Q மற்றும் L452R, என்ற கொரோனா வைரஸ் வகை பெரிய அளவில் பரவி பீதியைக் கிளப்பி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கடந்த வாரம் 57 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் கடந்த வாரத்தில் 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு பலியாகினர். உலக அளவில் ஏற்படும் புதிய பாதிப்புகளில் 46 சதவீதம் இந்தியாவில் மட்டும் உள்ளதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் 20 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
[youtube-feed feed=1]